Saturday 18 November 2017

யாழில் ஒரு கூவம்...


மாற்றங்கள் நிகழ வேண்டும். இடமாற்றங்களல்ல, மனமாற்றங்கள். அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் நாட்டின் வேகம் நிமிடத்துளிகளே. நவீன தொழில்நுட்பத்துடனும் நாகரிக வாழ்வுடனும் வரட்சியில்லாமல் வாழத் தலைப்பட்டுள்ளோம். 'குட்டிச் சிங்கப்பூர்' என்றழைக்கப்படும் இலங்கையின் முடிசூடிட்ட யாழ் நகர் இன்று சகல விடயங்களிலும் முன்னேறி வருவது பாராட்டத்தக்கது. இருப்பினும் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் மைய நகராக விளங்கும் யாழ் நகரின் சுகாதார சுற்றுப்புறச் சூழலின் சுத்தம் எம்மாத்திரம்? இந்தியாவின் கூவத்தினையே நினைவுபடுத்துகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக...


யாழ்ப்பாண நகர கடை வீதிகள், வைத்தியசாலையைச் சூழவுள்ள பகுதிகள், சந்தையினை அண்மித்த பகுதிகள் என முக்கிய இடங்களில் மழைநீர், கழிவு நீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால் மற்றம் அதனுடன் இணைந்த வடிகால் அமைப்புக்கள் கோடை காலங்களிலும் கூட அசுத்தமான, நோய் பரவக்கூடிய தன்மையுடன் நீர் மற்றும் குப்பை கூழங்களுடன் தேங்கி நிற்பது யாவரும் அறிந்ததே. தினந்தோறும் யாழ் நகருக்கு அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், வைத்தியசாலையில் பணி புரிபவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிந்தோடும் வாய்க்கால்களினால் மக்கள் பலரும் பல அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். 

பொறுப்புக்கூற வேண்டிய தலைமைகள்

குறிப்பாக, யாழ் போதனா வைத்தியசாலையைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்கள் கவலைக்கிடமான நிலையில் கவனிப்பாரற்று காணப்படுகின்றன. நோயாளர்களைக் குணப்படுத்தும் வைத்தியசாலைச் சுற்றுச் சூழலே இந்நிலையில் இருப்பதனால் நோயாளர்கள், பார்வையாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கால்வாய்களை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட ஊழியர்கள் 'அத்திபூத்தாற்' போன்றே வந்து சுத்தம் செய்வதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மாதத்திற்கு ஒரு தடவையாவது கூட இவற்றினைச் சுத்தப்படுத்துவது இல்லை என்றே கூறுகின்றனர். 

யாழ் நகருக்கு அரச உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டே  இச்சுத்தப்படுத்தல் இடம்பெறுகின்றது. ஏனைய நாட்களில் இவ்வழியாக வருபவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டே நடந்து செல்ல வேண்டிய நிலையாக உள்ளது. வாய்க்காலினுள் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. வாய்காலினுள் காணப்படும் கழிவுகளை அகற்றி நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வாய்க்காலிலிருந்து நீர் வடிந்தோடுவதற்காக இடப்பட்ட துவாரமானது சற்று மேலே உள்ளதால் நீரினளவு குறைந்திருக்கும் பட்சத்தில் வடிந்தோடாது தேங்கி நிற்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் யாழ் நகரில் கடை உரிமையாளர் ஒருவரிடம் கேட்ட போது, தினமும் இத்தகைய வாய்க்காலினூடாக துர்நாற்றம் வீசுவதாகவும், மாலை ஐந்து மணியளவில் நுளம்பின் தொல்லை அதிகரிப்பதாகவும், கடை உரிமையாளர்கள் சிலர் இணைந்து அறிவித்தால் மட்டுமே கழிவு வாய்க்கால்களைச் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதாகவும் கருத்தத் தெரிவித்தார்.