Saturday 18 November 2017

யாழில் ஒரு கூவம்...


மாற்றங்கள் நிகழ வேண்டும். இடமாற்றங்களல்ல, மனமாற்றங்கள். அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் நாட்டின் வேகம் நிமிடத்துளிகளே. நவீன தொழில்நுட்பத்துடனும் நாகரிக வாழ்வுடனும் வரட்சியில்லாமல் வாழத் தலைப்பட்டுள்ளோம். 'குட்டிச் சிங்கப்பூர்' என்றழைக்கப்படும் இலங்கையின் முடிசூடிட்ட யாழ் நகர் இன்று சகல விடயங்களிலும் முன்னேறி வருவது பாராட்டத்தக்கது. இருப்பினும் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் மைய நகராக விளங்கும் யாழ் நகரின் சுகாதார சுற்றுப்புறச் சூழலின் சுத்தம் எம்மாத்திரம்? இந்தியாவின் கூவத்தினையே நினைவுபடுத்துகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக...


யாழ்ப்பாண நகர கடை வீதிகள், வைத்தியசாலையைச் சூழவுள்ள பகுதிகள், சந்தையினை அண்மித்த பகுதிகள் என முக்கிய இடங்களில் மழைநீர், கழிவு நீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால் மற்றம் அதனுடன் இணைந்த வடிகால் அமைப்புக்கள் கோடை காலங்களிலும் கூட அசுத்தமான, நோய் பரவக்கூடிய தன்மையுடன் நீர் மற்றும் குப்பை கூழங்களுடன் தேங்கி நிற்பது யாவரும் அறிந்ததே. தினந்தோறும் யாழ் நகருக்கு அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், வைத்தியசாலையில் பணி புரிபவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிந்தோடும் வாய்க்கால்களினால் மக்கள் பலரும் பல அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். 

பொறுப்புக்கூற வேண்டிய தலைமைகள்

குறிப்பாக, யாழ் போதனா வைத்தியசாலையைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்கள் கவலைக்கிடமான நிலையில் கவனிப்பாரற்று காணப்படுகின்றன. நோயாளர்களைக் குணப்படுத்தும் வைத்தியசாலைச் சுற்றுச் சூழலே இந்நிலையில் இருப்பதனால் நோயாளர்கள், பார்வையாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கால்வாய்களை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட ஊழியர்கள் 'அத்திபூத்தாற்' போன்றே வந்து சுத்தம் செய்வதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மாதத்திற்கு ஒரு தடவையாவது கூட இவற்றினைச் சுத்தப்படுத்துவது இல்லை என்றே கூறுகின்றனர். 

யாழ் நகருக்கு அரச உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டே  இச்சுத்தப்படுத்தல் இடம்பெறுகின்றது. ஏனைய நாட்களில் இவ்வழியாக வருபவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டே நடந்து செல்ல வேண்டிய நிலையாக உள்ளது. வாய்க்காலினுள் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. வாய்காலினுள் காணப்படும் கழிவுகளை அகற்றி நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வாய்க்காலிலிருந்து நீர் வடிந்தோடுவதற்காக இடப்பட்ட துவாரமானது சற்று மேலே உள்ளதால் நீரினளவு குறைந்திருக்கும் பட்சத்தில் வடிந்தோடாது தேங்கி நிற்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் யாழ் நகரில் கடை உரிமையாளர் ஒருவரிடம் கேட்ட போது, தினமும் இத்தகைய வாய்க்காலினூடாக துர்நாற்றம் வீசுவதாகவும், மாலை ஐந்து மணியளவில் நுளம்பின் தொல்லை அதிகரிப்பதாகவும், கடை உரிமையாளர்கள் சிலர் இணைந்து அறிவித்தால் மட்டுமே கழிவு வாய்க்கால்களைச் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதாகவும் கருத்தத் தெரிவித்தார்.




நமது வீடுகளில் டெங்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டதும் குற்றப்பணம் அறவிடும் சுகாதாரப்பிரிவு இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது. பகிரங்கமாக தென்படும் இத்தகைய சுகாதார சீர்கேடுகளை விளைவிக்கும் கழிவுநீர் வாய்க்கால் சம்பந்தமாக பொறுப்பாக இருக்கும் யாழ் மாநகரசபை தலைமைகள் இவ்விடயம் தொடர்பில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு விடயத்திற்கும் பொறுப்பானவர்கள் அவ்விடயம் தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பொறுப்பதிகாரிகள் மக்களது தேவைகளை மக்களிடம் சென்று களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும். 

யாழ்நகர மழைநீர் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களுக்கு பொறுப்பான யாழ் மாநகர சபை பொறுப்பதிகாரியிடம் இது தொடர்பான தகவல் பெற கேட்டபோது, அவர்கள் தகவல் தர மறுத்தமை குறிப்பிடத்தக்கது. வெறுமனே பதவி ஆசனங்களில் இருந்து கொண்டு வாயால் மட்டுமே கதை சொல்லிகளாக இருந்து விடாமல் செயலை நடைமுறைப்படுத்தும் அரச அதிகாரிகளையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.  

சுகாதாரம்சார் பிரச்சினைகள்...

சாதாரணமாக கழிவுநீர் வாய்க்கால் என்பது நீர் சரியான முறையில் சீராக வடிந்தோடக்கூடிய நிலையில் இருந்தால் தான் கழிவுநீர் தேங்காது. அவ்வாறில்லாமல் கழிவுகள், குப்பை கூழங்கள் கொட்டப்படுமாயின் கழிவுநீர் வடிந்தோடாமல் நீர் தேங்கி மென்மேலும் மாசுபட்டு தொற்று நோய் கிருமிகளையும், துர்நாற்றத்தினையும், நுளம்புப் பெருக்கத்தையும் விளைவிப்பதோடு சுவாசம் தொடர்பான நோய்களும் ஏற்படலாம். 

இன்றைய நிலை.......



யாழ் தாதியர் கல்லூரிக்கு முன்பாக...

இன்று இத்தகைய சுகாதார சீர்கேடான வாய்க்கால்களுக்கு அண்மையில் பழக்கடைகள், உணவுச்சாலைகள் நடாத்தப்படுகின்றன. அண்மைக்காலமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் வருகை நம் நாட்டைப் பொறுத்தவரை அதிகளவில் விரும்பத்தக்க தளமாக யாழ்நகர் காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் இங்கு வரும் வெளிநாட்டவர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணக்கோட்டை, சங்கிலியன் சிலை முதலிய பிரசித்தி பெற்ற பகுதிகளை புகைப்படம் எடுப்பதைக் காணக்கூடியதாய் இருந்தது. ஆனால் இன்று கழிவுகளையும், கழிவு வாய்க்காலையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விசனம் தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

எமது தலைமைகளும், பதவி அதிகாரிகளும் மக்களின் பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர்தான் ஒரு செயற்பாட்டை முன்னெடுக்கும் நிலை உள்ளது. தமக்கென நியமிக்கப்பட்ட  பணிகளினை தாமாகவே முன்வந்து செயற்படுத்தும் தலைமைகள் இன்றளவில் மிக அரிதாகவே உள்ளனர்.

பொது மக்களின் பொறுப்பற்ற தன்மை

முற்று முழுதாக பொறுப்பானவர்களை குற்றம் சாட்டி விடக்கூடாது. நாம் இவ்விடயம் தொடர்பில் சிந்திப்பதில்லை. 'இங்கு குப்பை போட வேண்டாம்' என எங்கெல்லாம் வாசகம் எழுதப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் குப்பைகளைக் காண முடிகின்றது. யாழ் நகரிலுள்ள புல்லுக்குளம் மற்றும் வண்ணான்குளம் ஆகியவற்றுக்கு அண்மையில் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகள், இறந்த விலங்குக் கழிவுகள் எல்லாவற்றையும்  தூக்கி வீசுவது குறிப்பிடத்தக்கது.
வண்ணான் குளத்திற்கு அருகாமையில்...

யாழ் நகரின் மையப்பகுதிகளின் ஓர் சில இடங்களில் கழிவுகளை வகைப்படுத்தி அவற்றை அகற்றுவதற்கான வழிமுறையாக நிறங்களிலான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும் ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் கழிவுநீர் வடிந்தோடும் வாய்க்காலிலே கழிவுகளைக் கொட்டுகின்றார்கள். அனைவருக்கும் தேவையான அவசியமான அடிப்படையான சுகாதாரம் இன்று யாழ்நகர குப்பை கூழங்களுடன் இருக்கும் கால்வாய்களால் கேள்விக்குறியே! இந்தியாவின் கூவாகத்தை நினைவுபடுத்துகின்றது நமது யாழ் நகர்.

இனப்பிரச்சினை, மதப்பிரச்சினை, கொலை, களவு, அனர்த்தம், போதை என ஒரு பிரிவினர் அழிந்து கொண்டிருக்க இத்தகைய சீர்கேடுகளால் இன்னொரு பிரிவினர் அழிந்து கொண்டிருக்கின்றனர். நிறைவான விடயங்கள் ஆயிரத்தை எட்டியிருந்தாலும் ஒரேயொரு குறைபோக்கு இல்லை என்பதே அர்த்தம்.

வாய்க்கால் கழிவுநீர் இறுதியில் பண்ணைக் கடலுடன் கலக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீருடன் கொட்டப்படும் குப்பை கூழங்கள் கடலுடன் இணைவதால் கடல் மாசுபடும் தன்மையில் உள்ளது.

எதிர்காலத் திட்டத்தை நோக்கி......

உலக வங்கியினால் எதிர்காலத்தில் யாழ் நகரை அழகாக மாற்றியமைக்கும் நான்கு வருட செயற்றிட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்போது கால்வாய்கள் மூடப்பட்டு குழாய்கள் மூலம் நீர் வடிந்தோடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டவுள்ளது. இது எதிர்காலத்தில் பயனுடையதாக இருப்பினும் இதற்கிடைப்பட்ட காலப்பகுதியினுள் வடி கால்வாய்கள் தொடர்ந்தும் இந்நிலையில் காணப்படுவதாயின் சுகாதாரம்சார் பல அசௌகரியங்களை மக்கள் தொடர்ந்தும் சந்திக்க நேரிடும். 

முற்றுமுழுதாக பொறுப்பதிகாரிகளையோ, பொதுமக்களையோ குற்றம் சாட்டி இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது. இரு பகுதியினரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வாரத்திற்கு மூன்று முறையாவது இத்தகைய கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்துதருமாறு பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோளை முன்வைக்கின்றார்கள். எனவே, 'நோயற்ற வாழ்வை' நோக்கிப் பயணிப்பது நாட்டின் அபிவிருத்திற்கும், முன்னேற்றத்திற்கும் வழி சமைக்கும். 

No comments:

Post a Comment