Friday 8 December 2017

திருநங்கைகளும் ஊடகங்களும்


ஊடகங்களின் வளர்ச்சியும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய ஊடகத்தின் பங்கும் பாதிப்பும் அளவிட முடியாதவை. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையம், சமூக ஊடகங்கள் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடையே ஒரு தொடர்பு கருவியாக ஊடுருவும் ஊடகங்கள் காலப்போக்கில் மக்களின் பழக்கவழக்கங்கள், குணாதிசயம், பண்பாடு, கலாசாரம் முதலியவற்றை மாற்றக்கூடிய சக்தியாகவும் விளங்குகின்றன.

திருநங்கைகள் குறித்து வெகுஜன ஊடகங்களின் பங்களிப்பு


மேற்கத்திய நாடுகளில் ஊடகங்கள் மூன்றாம் பாலின புரிதலை மக்களிடையே எடுத்துச் சென்று பெரிய மாறுதல்களை உருவாக்கியுள்ளன. மேற்கத்தேய நாடுகளின் பாலினப் புரிதல் வளம் பெறத் தொடங்கியதும் மூன்றாம் பாலினத்தவருக்கான அங்கீகாரமும் முன்வைக்கப்படத் தொடங்கியது. பெரும்பாலும் பத்திரிகைகள் இவர்கள் குறித்த புரிந்துணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக திருநங்கைகள் குறித்த பார்வையின் பங்களிப்பு அதிகம் எனலாம். திருநங்கைகளின் வாழ்வியல் பிரச்சினைகள், அவர்களுக்கான அங்கீகாரம், உயர் பதவிகள் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் மூன்றாம் பாலினமான திருநங்கைகள் குறித்து ஓரிரு கட்டுரைகள் பத்திரிகைகள் அண்மைக் காலமாக பிரசுரமாகி வருவதை அவதானிக்க முடிகிறது. மாத இதழான 'வானவில்' பத்திரிகை 'இலங்கையில் திருநங்கையர்' என்னும் தலைப்பில் திருநங்கைகள் சார்ந்த பிரச்சினைகள், அவர்களுக்கான அமைப்புக்கள், சமூக மற்றும் தொழில்வாய்ப்பு தொடர்பாக பிரசுரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளிவரும் 'தீபம்' பத்திரிகை 'நான் பானுஜன் அல்ல மோனிஷh' என்னும் தலைப்பில் ஈழத்து திருநங்கையொருவரின் வாழ்வியல் வரலாற்றை அலசி வருகின்றது. வானொலிகளில் இவர்கள் குறித்த உரையாடலோ, நிகழ்ச்சிகளோ பேசு பொருளாக்கப்படுவது மிக மிகக் குறைவாகவே உள்ளது. 

மேலை நாட்டு தொலைக்காட்சிகளில் மூன்றாம் பாலினம் குறித்த விவாதங்கள் ஒளிபரப்பாகின்றன. ஈழத்தில் Dan TV இல் 'யாவரும் கேளீர்' எனும் நிகழ்ச்சி மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

குறும்படங்கள் இன்றளவில் மக்கள் மத்தியில் கருத்துருவாக்க விதைப்பைச் செய்ய வல்லன. குறுகிய மணி சேரத்திற்குள் காட்சிகளினூடாக சமூகத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியவை. அந்த வகையில் திருநங்கைகள் குறித்த ஏராளமான குறும்படத் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் சில தமிழ் குறுந்திரைப்படங்கள் இவர்களுடைய வலிகளை கூறியிருக்கின்றன. 'காகிதப்பூக்கள்', 'நானும் பெண்தான்', 'அச்சமில்லை', 'மனம்', 'மனிதம்', பேதை', 'என் இடம்' முதலியன குறிப்பிடத்தக்கவை. 

ஆவணப்படங்கள் தற்போது பெருகி வரும் ஊடகவழி என்றே கூறலாம். இந்தியாவைப் பொறுத்த வரையில் திருநங்கைகள் குறித்த சமுதாயப் பார்வையானது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆவணப்படங்கள் என்ற ரீதியில் திருநங்கைகளது வாழ்வியல் சடங்குகள், கூத்தாண்டவர் கோயில் திருவிழா, மிஸ் கூவாகம், மறுக்கப்படும் உரிமைகள் முதலியவை பேசப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் 'ஆண்டவனின் மணமகன்','அஃறிணைகள்', 'அரவாணிகள்' முதலியவையும், ஈழத்தில் பிறைநிலா கிருஸ்ணராஐாவின் 'இருக்கிறம்' ஆவணப்படத்தினையும் குறிப்பிட முடியும்.

இணையத்தில் திருநங்கைகள் பற்றிய பரவலான கட்டுரைகள், பதிவுகள் சமூகவலைத்தளங்களான முகப்புத்தகம், வலைப்பூக்கள் முதலியவற்றிலும் காணலாம். குறிப்பாக,  Sahodari.org, orinam.net ஆகிய இணையத்தளங்களிலும்  இவர்களுடைய செய்திகளைக் காணமுடியும். 

வெகுஜன ஊடகங்களில் திருநங்கைகளின் பங்களிப்பு

மேலைத்தேய நாடுகளில் திருநங்கைகளின் நிகழ்ச்சி மற்றும் பங்களிப்பு என்பன அதிகளவில் உள்ளன. இந்தியாவில் ஹிந்தி மொழிகளில் வரும் ஊடகங்களில் கூட கணிசமான பங்களிப்பு உண்டு. இந்தியாவில் திருநங்கை கல்கி சுப்ரமணியம் 'சகோதரி' என்ற பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிகின்றார். Chennai in and out Magazine’

 பத்திரிகையில் 'விடியலைத் தேடி திருநங்கைகள்' எனும் தலைப்பிலான கட்டுரைகளை திருநங்கை ஆயிஸா எழுதி வருகின்றார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் திருநங்கையான ரோஸ் வெங்கடேசன் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'இப்படிக்கு ரோஸ்' மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் 'இது ரோஸ் நேரம்', 'ரோஸிடம் பேசுங்கள்' முதலிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அண்மையில் 'லோட்டஸ்' ( Lotus Tv Channelதொலைக்காட்சியில் திருநங்கை பத்மினி பிரகாஸ் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். சினிமாவில் ஏராளமான திருநங்கைகள் தங்களது பங்களிப்பை ஊடகங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

திருநங்கைகளும் உலக சினிமாவும்

     மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமுதாயத்தில் அங்கிகாரம் பெறுவதில் எவ்வளவு பிரச்சினை ஏற்பட்டதோ அதே படிமுறை அவர்கள் குறித்த திரைப்படங்களில் அவை காண்பிக்கப்பட்டன. 1960 களிலேயே தான் திருநங்கைகள் குறித்த திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. உலகளவில் அதாவது பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், கனடா மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் திருநங்கைகள் தொடர்பான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் திருநங்கைகள் கதாபாத்திரங்களிற்கு திருநங்கை அல்லாதோரை நடிக்கச் செய்திருந்தனர். பிற்பட்ட காலங்களில் திருநங்கை கதாபாத்திரத்திற்கு திருநங்கைகளையே திரைப்படங்களில் காண்பித்தனர்.

     உலக சினிமாவிலே பொதுவாக திருநங்கைகள் தமது பெண்மை உணரும் பட்சத்தில் அவர்களுக்கு ஏற்படும் உளச்சிக்கல்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புக்கள், காதல் தோல்வி, சமூகப்பிரச்சினைகள்,பால்மாற்று அறுவைச்சிகிச்சை தொடர்பான விடயங்கள் குறித்து பேசப்பட்டன. ஆரம்பத்தில் 'திருநங்கை' கதாபாத்திரத்திற்கு திரைப்படங்களில் பெரியளவில் முக்கியத்துவம் வழங்கப்படாது ஒரு பகுதி பிரதிநிதித்துவத்தையே கொண்டிருந்தது. அதாவது பாலினத்தை தலைகீழாக மாற்றியமைத்தல் மற்றும் நளினம் முதலியவற்றுக்கே பயன்படுத்தப்பட்டனர்.

1920 களில் பொருளாதார மந்தம் காரணமாக திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த வேளை திருநங்கைகளது பிரச்சினையையே கருப்பொருளாக பிரதானமாக இருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் கவனத்திருப்பை ஏற்படுத்துவதற்காக பல படங்கள் சர்ச்சைக்குரிய கருப்பொருளை தலைப்பாக எடுத்துக் கொண்டமை இயக்குநர்களின் உத்தியே எனலாம்.

திருநங்கைகளும் தென்னிந்திய சினிமாவும்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து ஏராளமான பதிவுகள் உள்ளன. இவற்றில் திருநங்கைகளின் பதிவுகளே அதிகளவில் இருக்கின்றன. பெரும்பாலான பதிவுகள் அவர்களைக் கேலிக்குரியதாக எடுக்கப்பட்ட காட்சிகளாகவே அமைந்துள்ளன. ஆனால் திருநம்பிகள் பற்றிய எவ்வித பதிவுகளும் இந்திய தமிழ் சினிமாவால் பதியப்படவில்லை. டி.ராஜேந்திரனின் (1980) 'ஒரு தலைராகம்' படத்திலிருந்து 'கூவுற கோழி கூவுற வேளை...' தொடங்கி ஷங்கரின் 'ஐ' திரைப்படம் வரையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் கேலியாகவும், நகைச்சுவையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

'கட்டபொம்மன்' திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி வேலைத் தேர்வுக்காக காத்திருக்கும் திருநங்கைகளைத் திறமையற்றவர்களாகக் கருதி தவறான மதிப்பீட்டுடன் வெளியேறுகின்றார். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் வையாபுரி திருநங்கையாக விஜயின் நண்பராக வரும் காட்சிகள் கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளன. வசந்த் இயக்கத்தில் வெளிவந்த 'அப்பு'(2000) திரைப்படத்தில் ஆண்கள் திருநங்கைகளாக நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் திருநங்கையாக நடித்துள்ளார். இப்படம் திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாகவும், பெண்களைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளது. 

'சில்லுன்னு ஒரு காதல்' (2006) திரைப்படத்தில் வடிவேலுவிடம் உள்ள பணத்தை ஏமாற்றி பிழைக்கும் கூட்டமாகத் திருநங்கைகள் சித்திரிக்கப்படுகின்றனர். 'திருடா திருடி' எனும் திரைப்படக் பாடல் காட்சிகளில் திருநங்கைகளை கேலிசெய்யும் விதமாக அமைந்துள்ளது. இயக்குனர் அமீர்  'பருத்திவீரன்'(2007) திரைப்படத்தில் சில ஆண்களுக்கு சேலை உடுத்தி பெண்களாக அலங்கரித்து அவர்களை திருநங்கைகளாக காட்டியிருப்பார். 'ஊரோரம் புளிய மரம்..' என்ற பாடலையும் கேலியாக வெளிப்படுத்தியிருப்பார்.  

மாறாக, தென்னிந்திய சினிமாவில் மூன்றாம் பாலினத்தவரை சரியான புரிதல்களுடன் காட்டிய இயக்குனர்களும் உள்ளனர். திரையுலகில் திருநங்கைகளுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய 'பம்பாய்' படத்தில் கலவரச் சூழலில் பிரிந்து வாழும் சிறுவர்களைக் காப்பாற்றும் திருநங்கைகளாக கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 

'தெனாவட்டு' (2008) திரைப்படத்தின் தொடக்கத்தில் தமிழகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் காட்டப்பட்டுள்ளது. இறுதியில் கதாநாயகர்களை வில்லனிடமிருந்து காப்பாற்றுவதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. க்ரிஷ் இயக்கத்தில் வெளிவந்த 'வானம்' (2011) திரைப்படத்தில் திருநங்கைகளின் அன்றாட வாழ்வியல்  காண்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த 'ஐ'(2015) திரைப்படத்தில் நடித்த ஓரினச் சேர்கையாளரான ஓஸ்க்ராஜினி என்பவருக்கு வக்கிரமான பின்னணிக்குரலும் கொடுத்து, அப் படத்தின் நாயகன் முதல் நகைச்சுவை நடிகன் வரை ஏளனம் செய்யும் விதமாக திருநங்கை கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த தென்னிந்திய திரைப்படச் சூழலில் இது போன்ற குறைந்தளவு படங்களை திருநங்கைகளுக்கு மதிப்பளிக்கும் காட்சிகளை அமைத்துள்ளன. இத்திரைப்படங்களின் வரிசையில் 'நவரஸா'(2005) திரைப்படம் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் உருவாக்கப்பெற்றதாகும். இப்படத்தில் வரும் திருநங்கை பகலில் ஆணாகவும் இரவில் பெண்ணாகவும் வலம் வரும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 'காஞ்சனா'(2011) திரைப்படம் குறிப்பிடத்தக்கது. திருநங்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மதிப்பளிக்கப்பட்டுள்ளது. 

திருநங்கைகளை மையமாகக் கொண்ட தென்னிந்திய திரைப்படங்களாக 'கருவறைப்பூக்கள்','நவரஸா' மற்றும் 'நர்த்தகி' முதலியன உள்ளன. இயக்குநர் லூதர்சேவியரின் திரைப்படமான 'கருவறைப்பூக்கள்' (2011) வீட்டைவிட்டு வெளியேறும் திருநங்கையொருவர் சமூகத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அதனை எங்ஙனம் வெற்றி கொள்கிறார் என கதையை நகர்த்தியுள்ளார். இயக்குநர் விஜயபத்மாவின் 'நர்த்தகி'(2011) திரைப்படம் கல்கி என்ற திருநங்கையின் வாழ்வியலினையும் திருநங்கைகள் குறித்த சடங்குகளையும்  வெளிப்படுத்துவதாக உள்ளது. 'கிரிக்கெட்ஸ்கேண்டல்' எனும் திரைப்படமானது முதன்முறையாக  திருநங்கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

                               எல்லாவற்றுக்கும் மேலாக, திருநங்கைகள் தொடர்பில் வெளியான விளம்பரமொன்று, அவர்கள் மீது சமூகம் கொண்ட கருத்தியலில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளது. திருநங்கைகளை இழிவுபடுத்தி வெளிப்படுத்திய அவர்களது உடல்மொழியை விழிப்புணர்வு ஊட்டும் வகையில் காண்பித்திருக்கின்றது. அதாவது, வாகன ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை  உணர்த்துவதற்கு அவர்களது உடல்மொழியை சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பது சமூகம் கொண்டுளள மனமாற்றத்தை சுட்டி நிற்கின்றது.

No comments:

Post a Comment