Friday 8 December 2017

                   
 பயணங்கள் முடிவதில்லை...


    பயணங்கள் முடிவதில்லை. நாள்தோறும் அரங்கேறும் அனுபவங்கள் அவை. எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று பயணப்படுவது. அதுவும் பேரூந்தில் யன்னலோர இருக்கையில் அமர்ந்து பாடல்களை ரசித்தபடி பயணம் செய்வதில் அலாதிப் பிரியம் எனக்கு. வகுப்பறைக்குள் ' Trip' என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பவளும் நான்தான் உச்சக்கட்டமாக அதனை ஆமோதிப்பவளும் நான்தான். 

வெளிநாட்டிலிருந்து மாத விடுமுறையில் நாட்டிற்கு வந்திருந்த என் மாமாவின் நண்பர் ஞானம் அண்ணா எம்மையெல்லாம் கதிர்காமம் அழைத்துச் செல்வதாக ஏற்கனவே மாமாவிடம் சொல்லி வைத்திருந்தார். யார் யாரெல்லாம் வருகிறார்கள் எனப் பேசிக்கொண்டார்கள். எனக்கோ ஞானம் மாமாவை தெரியாது. இதற்குள் அவரது குடும்ப உறுப்பினரைத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. கதிர்காமம் என்றாலே பழசுகள் அரோகராப்போடுங்கள் அவர்கள் போட்ட வரிசையில் என்னுடைய வயதில் யாரும் அங்கு இல்லை. இருந்தால் பேச்சுத்துணைக்கு உதவியாக இருந்திருக்கும். ஆனாலும் என்ன ஓசீப்பயணம் ஆயிற்றே. இது வரையிலும் நான் போகாத இடம்.
                                எனக்கோ அன்று முழுவதும் இரட்டிப்பு மகிழ்ச்சி. முதல்நாள் இரவுப்பொழுதினை என்னால் கடக்க இயலவில்லை. இயற்கையின் நியதியும் அதுதானே. எல்லோருமாகச் சேர்ந்து மறுநாள் காலை 4 மணிக்கு புறப்படுவதாக தீர்மானமாயிற்று. இரண்டு நாட்களின் பயணம் மட்டுமே என் எண்ணத்தில் நிழலாடியது. மறுநாள் 2 மணிக்கெல்லாம் நான் எனது பயணப்பையுடன் தயாராகிவிட்டேன் என்றே சொல்லலாம். அடுக்கி வைத்த ஆடைகளை அடிக்கடி சரிபார்த்துக் கொண்டேன். எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் சரியாக 4 மணிக்கெல்லாம் 'ஈசன் ரவல்ஸ்'  தனது பயணத்தைத் தொடர வந்திருந்தது. பிள்ளையார் கோவிலில் பேரூந்து  வந்திருந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. பயணத்தை நல்லபடியாக ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்தக் கோவிலில் தேங்காய் உடைப்பது என்று பேசியமையுமாகும்.

                    சொல்லிவைத்த நேரத்திற்கு புறப்படுவதற்கு நாங்கள் ஒன்றும் வெள்ளைக்காரனில்லையே. எல்லோரும் வந்து சேருவதற்குள் மாலை 4.45 ஆகியது. எனக்கோ பேரூந்தில் ஏற எப்போது அனுமதிப்பார்கள் என்றிருந்தது. சுற்றும் முற்றும் என் கண்கள் எல்லோரையும் நோட்டமிட்டது. எனக்கு ஆசனம் கிடைக்குமா என்ற நோக்கில்த்தான். இதுவே எனது வீட்டில் ஒழுங்குபடுத்திய சுற்றுப் பயணம் என்றால் நான் தான் நாயகி. ஆனால்  சுற்றுப்பயணத்தை ஒழுங்குபடுத்தியவர்  ஞானம் மாமாதானே. அதனால் அவர்களுடைய உறவினர்கள் ஏறும் வரை காத்திருந்தேன். எனது பாட்டியையும், மாமாவையும் தவிர வேறு ஒருவரும் எனக்கு அறிமுகமானவர்கள் இல்லை.    சமைப்பதற்காக கொண்டு சென்ற பொருட்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. எல்லோரும் ஏறிய பின்பு நானும் ஏறிக்கொண்டேன். பேரூந்தின் பின்பக்க ஆசனங்கள் முழுவதையும் நாம் கதிர்காமத்தில் சமைப்பதற்காக கொண்டு சென்ற பொருட்கள் ஆக்கிரமித்து கொண்டன.அதற்கு முன்னிருந்த ஆசனம் ஒன்று என் வரவை எதிர்பார்த்திருந்தது போலும். ஓடிப்போய் அமர்ந்து கொண்டேன். எல்லோர் முகத்திலும் பக்திப்பரவசம் தான். எனக்கருகில் என் பாட்டி அமர்ந்து கொண்டார்.
                              சிலநிமிடங்கள் கழித்து பேரூந்து எல்லோரையும்                யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்கு ஏறத்தாழ  395KM பயணம் செய்ய வேண்டும். பேரூந்துக்குள் பக்தி மயமான பாடல்களே ஒலித்துக்கொண்டிருந்தன.எனக்கோ 'பாட்டை மாத்துங்கோ' என்று கூறவேண்டும் போலிருந்தது. ஆனாலும் வயசு போனதுகள் ஏதாவது தப்புக்கணக்கு போட்டு விடுங்களோ என்று நினைத்து ஒன்றும் கூறாமலிருந்து விட்டேன். எங்கேயாவது இறங்க வேண்டியிருந்தால் ரைவரிடம் (Driver) இது பற்றிக் கூறிவிடுவது என்று தீர்மானித்திருந்தேன். யாழிலிருந்து புறப்பட்ட பேரூந்துப் பயணம் முல்லைத்தீவு, திருகோணமலையைத் தாண்டியது. என்னையும், ஞானம் மாமாவையும், என்னுடைய மாமாவையும் தவிர எல்லோரும் காத்துவாக்கில் நல்ல உறக்கம். 

        அச்சமயத்தில் வண்டி திருகோணமலையில் உள்ள ஏதோ ஒரு ஹோட்டலில் நிறுத்தப்பட்டது. எல்லோரும் தூக்கம் கலைந்து வண்டியில் இருந்து இறங்கி அவசர தேவைக்காக வரிசையில் நின்று பாரத்தை இறக்கி வைத்தார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்போதுதான் நாம் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொண்டோம். எனது பாட்டிக்கு ஒரு துணைப்பாட்டி கிடைத்துவிட்டார் என்பது பேசிக்கொண்டேயிருந்த என் பாட்டியின் முகத்தில் ஒரு பூரிப்பில் தெரிந்தது. 10 வருசத்துக்கு முதல் அவர் இருக்கேக்க வந்தது. முருகன் இப்பதான் வழிவிட்டிருக்கான் என ஏதோ கூறிக்கொண்டிருந்தாள். பாட்டி கேட்டதற்கிணங்க துணைப்பாட்டியின் ஆசனத்தில் இருக்கவேண்டியதாயிற்று. பரவாயில்லை யன்னலோர இருக்கைதான். எனதருகில் இப்போது  35 வயது மதிக்கத்தக்க ஞானம் மாமாவின் மனைவி கல்பனா அக்கா. எனது பாட்டியை விட இவருடன் இருப்பது மனதிற்கு முதலில் சங்கடமாயிருந்தது. பின்னர் இருவரும் எமது சுயவிபரக்கோவையை பரிமாறிக்கொண்டோம். பழகிக்கொண்டோம். நேரம் 10 மணியைத் தாண்டியிருந்ததனால் நிலவொளியின் வீச்சு நிலவு தன்னை நிறைமாதமாக இருப்பதைக் காட்டியது.

                      சில்லென்ற காற்றும் ஒருவித மணமும் நாம் ஏதோ கடற்பிரதேச வீதியால் சென்றுகொண்டிருந்ததை உணர்த்தியது. அந்த மணம் 10 நிமிடங்களுக்கப்பால் காணாமல் போய்விட்டது. மீண்டும் கல்;பனா அக்காவுக்கு பேச்சுக் கொடுத்தேன். ஏதோ நேர்த்திக்கடனுக்காகவே இப்பயணம் என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன். ரைவருக்கும்  பக்திப்பாடல் கேட்டு அலுத்து விட்டது போலும். அவரும் என்னைப் போல கொஞ்சம் இரசனையுணர்வு கொண்டவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்தப் பொழுதுக்கான மனம் மயக்கும் பாடல்களை ஒலிக்க விட்டிருந்தார். எனக்குப் பிடித்தமான குரலில் 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற  பாடலை என்ற பாடலில் மூழ்கி என் இயற்கையுடனான நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தேன். 

                                  இந்தப் பயணம் இப்படியே தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்ற என் எண்ணத்திற்கு தடைபோட்டது பேரூந்து நிறுத்தம். பேரூந்துக்குள் ஒரே சலசலப்பு. Driver seat இலிருந்து பின் இருக்கை வரைக்கும் குறுஞ்செய்தி ஒன்று  பரவிக்கொண்டிருந்தது. நானும் ஆர்வத்துடன் எட்டிப்பார்த்தேன். பேரூந்தின் விளக்கு வெளிச்சத்திற்கு தாய் யானை ஒன்றும் சேய் யானை ஒன்றும் நிற்பது தெரிந்தது. உடனே என் கைப்பைக்குள் இருந்த Camera ஐ On பண்ணி யானைகளை Photo எடுப்பதற்கு முயற்சித்தேன். பலன் கிட்டவில்லை. Camera வின் கண்களுக்கு யானைகள் தெளிவாகப் புலப்படவில்லை. இதற்கிடையில் முன்னாயத்தமாக யானைகள்  இப்படி வழிமறிக்கும் (உண்மையில் அவைகளின் நடமாட்டத்திற்குரிய நேரமது) என்பதைத் தெரிந்து  வாழைப்பழக்குலையை வாங்கி வைத்திருந்தனர் நமது தீர்க்கதரிசிகள். அவை மிரண்டு கொண்டிருந்தன. முன்னாலிருந்து சைகை வர அமைதியானோம். ஞானம் மாமா வாழைப்பழத்தை கொடுக்க தும்பிக்கை நீட்டி பெற்றுக் கொண்டு வழிவிட்டன. 'போன உசிரு வந்திருச்சு...' பாடல் நினைவுக்கு வர மனதிற்குள் நகைத்துக்கொண்டேன். மீண்டும் எமது பயணம் தொடர்ந்தது.

           எங்கும் நிசப்தம்.  குளிர்காற்று திறந்திருந்த யன்னலோரக் கதவினூடாக என்னை மயிர்கூச்செறியச் செய்தது. சற்றுநேரம் கண்மூடி நித்திரையை வரவழைத்துக் கொண்டேன். சிலமணி நேரம் கழித்து பேரூந்து எங்கோ ஓரிடத்தில் நிறுத்தப்பட்டதை உணர்ந்து கொண்டேன். கையில் இருந்த கைக்கடிகாரம் 2.30 ஐ காட்டியது. 'எல்லாரும் இறங்குங்கோ கதிர்காமம் வந்திட்டு' என்ற குரல் கேட்டு கண்ட கனவை பாதியிலே தொலைத்து அனைவரும் தூக்க அசதியுடன் பேரூந்தை விட்டு இறங்கினார்கள். எனக்கோ எங்கேயாவது முகம் கழுவி விட்டு காலை நீட்டி  நிமிர்ந்து தூங்க வேண்டும் போலிருந்தது.
          நாங்கள் எல்லோருமாகச் சேர்த்து 15 பேர் வந்திருந்தோம். எம்மையும் எமது பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்காக மடம் தேடும் படலம் ஆரம்பித்தது. ஒருவாறாக மடத்தின் அரைவாசிப்பகுதியை கைப்பற்றிய பெருமை ஞானம் மாமாவின் அப்பாவையே சாரும். தண்ணீர்த் தொட்டி தேடி கால்களை நனைக்கவே பிடிக்கவில்லை. எங்கே ஈரம் தொற்றி குளிர்ந்து விடுமோ என்ற பயம்தான். எல்லோரும் அவரவர் கொண்டுவந்த விரிப்புக்களை விரிக்க நானும் எனது பாட்டியும் ஒரு விரிப்பையே பங்கு போட்டுக்கொண்டோம். 'ஐந்து மணிக்கெல்லாம் எழும்பிட வேண்டும்' என பாட்டி என்னிடம் சொல்லி வைத்தாள். இன்னும் 2 மணித்தியாலத்துள் தூங்கி எழும்பிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே அயர்ந்துவிட்டேன். சொல்லி வைத்தாற்போல் ஐந்து மணிக்கு எல்லோரும் கதிர்காமக் கோயிலைத் தரிசனம் செய்வதற்காக மாணிக்க கங்கையில் நீராடினோம். என் பற்கள் குளிரால் தமக்குள் அடித்துக்கொண்டன. ஓரிரு நிமிடங்களின் பின்னர் என் உடல் தண்ணீருக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டது. கங்கையிலிருந்து மீண்டுவருவதற்கு என் மனம் சம்மதிக்கவில்லை. ஓடிக்கொண்டிருக்கும் மாணிக்க கங்கையை பார்த்த போது இந்த கங்கை இப்படியே எத்தனை காலம் ஓடிக்கொண்டிருக்கிறது: இன்னும் எவ்வளவு காலம் ஓடும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

                             எனக்கான சிரமம் சற்று நேரத்தில் காத்திருந்தது. எனக்கு மட்டுமல்ல அனைத்து பெண்களுக்குமானது என்றே கூறுவேன். இவ்வளவு பெரிய பிரசித்தி பெற்ற கோயிலில் ஆடை மாற்றுவதற்கான மறைவு இடங்கள் கட்டப்படவில்லை என்பதை நினைக்கும் போது ஆலய நிர்வாகத்தின் மீது கொஞ்சம் கோபம் தான். அகன்று கிளை பரப்பி நின்ற ஒரு மரத்தின் பின்னால் சிரமப்பட்டு உடைகளை மாற்றிக் கொண்டோம்.                           
                    நானும் எனது பாட்டியும் சேர்ந்து கதிர்காம முருகனை தரிசிக்க ஆயத்தமானோம். கோயிலருகே சென்றதும் பாட்டி 'அப்பனே முருகா' என்று முருகனுடன் ஐக்கியமானார். என்னைப் பொறுத்த வரையில் கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் கூறமாட்டேன். உண்டு என்றும் கூறமாட்டேன். ஏனெனில் நான் சந்தர்ப்பவாதி. தேவையான சந்தர்ப்பங்களில் மட்டுமே நினைத்துக் கொள்வேன். ஆனாலும் கதிர்காமத்தலம் பற்றிய கதைகளை 10ஆம் வகுப்பில் படித்த ஞாபகம். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில், சிங்கள மன்னனான துட்டகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் கூறுவதாகப் படித்திருக்கின்றேன்.

          நாங்கள் சென்ற சமயம் திருவிழாக்காலமாக இல்லாதிருந்தமையால் நன்றாக எல்லாவற்றையும் பார்த்து இரசிக்கக் கூடியதாக இருந்தது. கோயிலைச் சுற்றிக் கும்பிடுவதற்காக பாட்டி மெல்ல நடந்தார். அவரைப் பின்தொடர்ந்தேன். பத்து அடி உயரமான மதில்களில் யானைகளினதும், மயில்களினதும் அணிவகுப்பு. கோயிலைச் சுற்றி வர 'வட்டாரம்' எனப்படும் சிறுபிரகாரம் உள்ளது. கோயிலின் மேற்கூரை செப்புத்தகடுகளால் ஆனது. வாயிற்கதவுகள் பித்தளையால் செய்யப்பட்டு வேலைப்பாடுகளுடன் அரண்மனையின் கதவுகள் போன்றிருந்தன. அதனுள் நுழைய சந்திரவட்டக்கற்களாலான இரண்டு படிகள் உள்ளன. வெண்கலத்திலாலான பெரிய சேவல் விளக்குகள் இரு புறமும் நிற்கின்றன. கந்தன் குறித்த புராணக் காட்சிகள் ஓவியங்களாக சுவர் முற்றிலும் வரையப்பட்டிருந்தன. ஒரு மேடையின் மீது சந்நிதியுள்ளது. பூஜை செய்யும் குருமார்கள் ஏறுவதற்குச் சில படிகள் உள்ளன. மேலே இருப்பது லதா மண்டபம். மேடையில் ஒரு பள்ளம் உள்ளது. அதில் பாதம் நனைத்த பின்னர் அவர்கள் பூஜை செய்யத் திரைக்குள் என்ன இருக்கிறது என்பது ரகசியமாகவே உள்ளது.

                         பக்தர்கள் இறைவனுக்குப் பலவிதமான பழங்கள், சிவப்புச் செயற்கைமாலை சிவப்புத்துணி இவற்றைத் தட்டில் வைத்துப் பட்டுத்துணியால் மூடிப் பயபக்தியுடன் கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து அதனை மழுண்டும் பெற்றுச் செல்கிறார்கள். மூடிய திரைக்குள் பூஜை நடைபெறுகின்றது. குருக்கள் தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு முதுகில் ஒரு துண்டைத் தொங்க விட்டு பூஜை செய்கிறார். கோயிலுக்கு அருகில் பைரவர் சந்நிதி, தெய்வானை சந்நிதி ஆகியவை திரைகளுடன் உள்ளன. பைரவர் சந்நிதிக்கு எதிரில் சிறிய விஸ்ணு உருவம் உள்ள சந்நிதி உள்ளது. இங்குள்ள போதி மரங்கள் சங்கமித்திரை கொண்டுவந்த கிளையிலிருந்து உருவானதாகச் சொல்லப்படுகின்றது. புத்தர் கோயிலும் அங்கு உள்ளது. பௌத்தர்களுக்குரிய 16 முக்கிய இடங்களில் இதுவுமொன்றாகும். 
                             கதிர்காம முருகப்பெருமானுக்கு நேர் எதிரில் வள்ளி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு திரையில் தாமரைப்பூவைக் கையில் ஏந்திய தோற்றத்தில் இருக்கிறார் வள்ளி. அருகில் ஒரு அம்மன் கோயிலும் ஒரு மசூதியும் உள்ளன. விழாக்காலங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்களாம். கரகாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், கோலாட்டம் ஆகியனவும் நடைபெறுமாம். இங்கு மாணிக்க கங்கையாற்றின் கரையில் மாணிக்க விநாயகர் திருக்கோயில் உள்ளது. கதிர்காமத்திற்குச் சற்று வடக்கில் செல்லக்கதிர்காமம் என்னும் ஊர் உள்ளது. இதனை முன்னர் 'வள்ளித்தீவு' என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றது. இந்த இடத்தில் தான் முற்காலத்தில் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்றும் கூறப்படுகின்றது.
                                    கோயிலில் இருந்து வெளியே வரும்போது மணி 12.20 ஐ கடந்துவிட்டது. நாங்கள் இருவரும் கதைத்துக்கொண்டே மடத்தருகே உட்கார்ந்து கொண்டோம். இதற்கிடையில் எங்களில் ஒரு கூட்டம் தமது நேர்த்தியை நிறைவேற்றும் பொருட்டாக 'குழைசாதம்' செய்வதற்கென பணிக்கப்பட்டார்கள். தங்கள் கடமையை சரியாகத்தான் செய்திருக்கிறார்கள் என்பது சாதம் உண்ணும் போது புரிந்துகொண்டேன். எல்லோரும் தமக்கு தெரிந்த கதைகளை பரிமாறிக்கொண்டிருந்தனர்.

 நானோ அம்மாவிடம் கெஞ்சி வாங்கிய 3000 ரூபாயை பொருட்களாக மாற்றுவதில் குறியாக இருந்தேன். பாட்டியிடம் கூறிவிட்டு கடைப்பக்கமாகச் சென்று எனக்கான தேடுதல் வேட்டையை ஆரம்பித்தேன். கடைகளிலும் சிரிப்புதான் தெரிந்த இம்மியளவு சிங்களத்தை வைத்து சமாளிக்க முயன்றதேயாகும். ஒருவாறாக எனக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொண்டேன். கைப்பைக்குள் நோட்டமிட்ட கண்கள் வெறும் 1200ருபா இருப்பதைக்கண்டு கொண்டன. இதற்கு மேல் செலவு செய்தால் செல்லக்கதிர்காமத்தில் ஏதும் வாங்க முடியாது போய்விடும் என்ற எண்ணம் மேலோங்க மடம் நோக்கிச் சென்றேன்.

                 என்னுடைய பாட்டிக்கு நான் வாங்கிய பொருட்களை காட்டி விட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காதவளாய் பைக்குள் போட்டுக்கொண்டேன். ஏனெனில் அவரின் பதில் தெரியும். வீட்டிலே பல தடவைகள் கேட்டதுண்டு.  எங்களோடு வந்திருந்தவர்கள் சிதறி கோயில் தரிசிக்க, கடைக்கு என தத்தம் பிரயாத்தனங்களில் ஈடுபட்டார்கள். எனது பாட்டியுடன் செல்லம்மா பாட்டி மீண்டும் கைகோர்த்து விட்டார். இருவரும் தங்களது பிரசங்கங்கங்களை நிகழ்த்தினர். Camera ஐ எடுத்து கண்டதையெல்லாம் கண்டபாட்டில் எடுத்து Memory  ஐ முழுமையாக்கியதில் ஆத்மதிருப்தி. ஆனாலும் பரவாயில்லை. photo journalism படித்திருந்தது பெரும் உதவியாய் இருந்தது. ஓரளவுக்கு நேர்த்தியாகவே இருந்தது.  இரவுச்சாப்பாடு என்னவாய் இருக்கும் என்ற அங்கலாய்ப்பு வேறு. மத்தியானம் வைத்த பருப்பு மிஞ்சியதால் இரவுக்கு பாணையே வாங்குவதாக தெரிவித்திருந்தது கூட்டணி. பாணும் பருப்பும் இரவுச் சாப்பாடாயிற்று. பிறகு என்ன ஒரு போர்வைக்குள் இரு தூக்கம். (நானும் எனது பாட்டியும்)

                       செல்லக்கதிர்காமம் புறப்படுவதற்கென குளித்து காலை 6 மணிக்கெல்லாம் ஆயத்தமானோம். முதல் நாள் இரவில் பயணம் செய்ததால் பெரிதாக ஒன்றையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் அதே யன்னலோர இருக்கையை நாடினேன். செல்லக்கதிர்காமம் செல்லும் வழியில் வந்த சுகந்தத்தை அனுபவிக்க முடிந்தது. வரிசையாக வனத்தின் எல்லைகள், சாலை நெடுங்கிலும் ஒருவித வனப்பு. பனிமூட்டம் பகலவன் வரவை கண்டு தம் இருப்பிடம் திரும்புவதற்கான நேரமது. அருவி போன்றதொரு நீர்நிலை ஆங்கே ஓடிக்கொண்டிருந்தது.பேரூந்தின் வேகம் குறைந்தபோது நான் நிறையவே யோசித்துவிட்டேன். தண்ணீர் போத்தல்கள் வாங்கவே ஞானம் மாமாவும் என்னுடைய மாமாவும் இறக்கி விடப்பட்டிருந்தார்கள். அச்சமயத்தில்தான் பூக்களின் மாநாடே நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்தின் பெயர் சரியாக நினைவில்லை.பல நிறங்களில் பக்குவமடைந்து பருவமகளுடன் காற்றில் ஏதோ பேசிக்கொண்டது என் காதுகளுக்கு கேட்டது. இயற்கை எல்லோருக்கும் அழகுதான்.

                                        சரியாக 30 நிமிடங்கள் கழித்து செல்லக்கதிர்காமத்தைச் சென்றடைந்தோம். பேரூந்திலே மேலே செல்லும் மார்க்கம் இருந்தும் படிகளில் நடந்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டும் என பேரூந்துக்குள்ளே கதைத்துக்கொண்டது தெரியும். படிகளில் ஏறத்தொடங்கிய ஆரம்பத்தில் புத்துணர்ச்சியாகத்தான் இருந்தது. இன்னும் மேலே செல்லச்செல்ல ஐயோ என்னடா இது இன்னும் முடிவாகவில்லையே கீழேயே நின்றிருக்கலாம் என எண்ணியது மனம். திரும்பி பார்த்தேன். எனது பாட்டியும் செல்லம்மா பாட்டியும் அம்மன் பவனி வருவதுபோல் ஆடி அசைந்துவந்து கொண்டிருந்தனர். ஆனாலும் என் பாட்டிக்கு தைரியம் அதிகம். எந்த இடத்திலும் களைப்பாற இருக்கவில்லை. நானோ நாலைந்து இடங்களில் இருந்து விட்டேன். எனக்கருகில் ஞானம் மாமாவின் சித்தியாம் புவனேஸ்வரி. நாங்கள் இருவரும் கதைத்தபடியே மலை ஏறும் காண்டத்தை நிறைவு செய்துவிட்டோம். எனக்குள் ஒரு நினைப்பு இவ்வளவு உயரத்தில் இருக்கும் கோயில் ஆடம்பரமாக இருக்கும் என்று. என்னுடன் பேசிக்கொண்டு வந்த புவனேஸ்வரியம்மா அர்ச்சனை பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் கூறிவிட்டு கோயிலுக்குள்ளே சென்றேன். பூசை நடந்து கொண்டிருந்தது. கதிர்காமத்தை விட செல்லக்கதிர்காமம் வெகுவாக என் மனதை பாதித்திருந்தது என்றே சொல்லலாம். கால் கடுப்பின் போது முருகனுக்கு வேறு போக்கிடமில்லாது இங்கு மலையேறி விட்டானே என அடிக்கடி நினைத்துக் கொண்டேன். 
மலை உச்சியிலிருந்து கீழே பார்த்த போது உடலே நடுங்கியது. பார்க்கவே பயமாக இருந்தது. என்னோடு வந்தவர்கள் எல்லோரும் கோயிலைச் சுற்றிச்சுற்றி பார்த்தார்கள். கோயிலின் ஓர் ஓரமாயிருந்து எம் முன்னோர்களின் (குரங்குகள்) விளையாட்டினை தீவிரமாக ரசித்துக் கொண்டிருந்தேன். பக்தர்கள் கொண்டுவந்த தேங்காய், வாழைப்பழம் என அவற்றைப் பிடுங்கி உண்டன. அதிலும் அவர்களுக்குள் போட்டி. மரத்திலிருந்து தாவுகின்ற போது அதன் இயல்பு மறந்து ஐயோ கீழே விழுந்து விடுமோ என்று என்னை அறியாத பயம்.

                                      மீண்டும் கீழே இறங்குவதை நினைக்கவே மனம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கே கொடுக்கப்பட்ட வெண்பொங்கல் பிரசாதம் ஏற்கனவே இருந்த பசியை கிளறிவிட்டிருந்தது. நல்ல வேளை தனக்கு வேண்டாம் என்று கொஞ்சம் எடுத்துவிட்டு மிகுதியை தந்தார் பாட்டி.  வெண்பொங்கல் நன்றாகத்தான் இருந்தது. நேரம் ஒரு மணியைக் கடந்து கொண்டிருந்தது. வெயில் தெரியவில்லை. அவ்வளவு மரங்கள், குளிர்மை கூடிய இடமது. எல்லோருடைய ஏகோபித்த சம்மதத்துடன் 1.30 க்கு கீழே இறங்குவதென்று முடிவாயிற்று. ஏறியதை விட இயங்குவதில் பெரிதாக கஸ்டம் தெரியவில்லை. சிறிது தூரம் நின்றவுடன் கால்கள் நடுங்கி தரையில் நிற்க மறுத்துக்கொண்டன. ஒரே நடையில் இறங்கி விடுவதென்று எடுத்த என் முயற்சி வெற்றியடையவில்லை.

இறங்கும் போது மீண்டும் அதே வானரங்களின் விளையாட்டு. ஒருவாறு எல்லோரும் இறங்கி வருவதற்குள் 3 மணியாகிவிட்டது. மலையேறிவிட்டு பிறகு வாங்கலாம் என்று நினைத்து விட்டுச்சென்ற கடைகளுக்குள் புகுந்து கொண்டேன். எனக்கு விருப்பமான பொருட்கள் எதுவும் இல்லாமையால் எதையும் வாங்கிக் கொள்ளாமல் பேரூந்தை நோக்கி என் கால்கள் நடைபோட்டன. இறங்கி வந்த களைப்பு வேறு. அதுதான் இந்த உடனடி முடிவு. வீடு திரும்புவதற்காக பேரூந்துக்குள் ஏறிக்கொண்டோம்.


அதே பேரூந்து, அதே இருக்கை, அதே பாதை, அதே மனிதர்கள். ஆனால் மனம் மட்டும் ஏதோ கனத்திருந்தது. பயணம் முடியும்  தறுவாய். பயணங்கள் முடிவதில்லை.மீண்டும் ஒரு பயணத்தை நம்பி வீடு வந்து சேர்ந்தோம்.

No comments:

Post a Comment